போலீசார்- வட்டார போக்குவரத்து அலுவலர்களிடையே கருத்து வேறுபாடு: ஒரே இடத்தில் கூடிவிட்டு தனித்தனியாக விழிப்புணர்வு பேரணி நடத்தியதால் பரபரப்பு

கடலூரில் ஒரே இடத்தில் கூடிவிட்டு போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனித்தனியாக விழிப்புணர்வு பேரணியை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-01-22 00:43 GMT
கடலூர்,

சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி கடலூர் போக்குவரத்து போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலகமும் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியை கடலூர் டவுன் ஹாலில் நடத்த ஏற்பாடு செய்தனர். இதற்காக காலை 8.30 மணி முதலே பெண் போலீசார் ஹெல்மெட் அணிந்தபடி பேரணிக்கு தயாராக நின்றனர்.

இதேபோல் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களும் ஹெல்மெட் அணிந்த படி இரு சக்கர வாகனத்தில் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். பேரணியை தொடங்கி வைக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி வந்தார். ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அலுவலர்கள் வர தாமதம் ஏற்பட்டது.

கருத்து வேறுபாடு

இதற்கிடையில் போலீசார் நின்ற வரிசைக்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அழைத்து வரப்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் மோட்டார் சைக்கிளில் முன் பகுதிக்கு சென்று நின்றனர்.

இதை அறிந்த போலீசார், ஏற்கனவே நாங்கள் வந்து விட்டோம். எங்களுக்கு முன்பு அவர்களை எப்படி நிறுத்தலாம் என்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்களிடம் கேள்வி எழுப்பினர்.இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

தனித்தனியாக நடந்த பேரணி

இதையடுத்து போலீசார், நாங்கள் தனியாக பேரணி நடத்திக்கொள்கிறோம் என்று கூறி, இரு சக்கர வாகனத்தில் நின்ற பெண் போலீசாரை கடலூர் உழவர் சந்தைக்கு வரவைழத்தனர். பின்னர் அங்கிருந்து பேரணியை துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தொடங்கி வைத்தார். இந்த பேரணி முதுநகர் மணிக்கூண்டு வரை சென்றடைந்தது.

இதற்கிடையில் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) முக்கண்ணன் வந்து, டவுன்ஹாலில் இருது மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஹெல்மெட் விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணி பாரதி சாலை வழியாக சென்று, இம்பீரியல் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை வரை சென்றடைந்தது. ஒரே இடத்தில் கூடிவிட்டு தனித்தனியாக விழிப்புணர்வு பேரணியை நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்