மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏற்றிய கன்னட கொடியை அகற்ற பெலகாவிக்குள் நுழைய முயன்ற சிவசேனா கட்சியினர்

மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏற்றிய கன்னட கொடியை அகற்றுவதற்காக, பெலகாவியில் நுழைய முயன்ற சிவசேனா கட்சியினரை போலீசார் எல்லையில் தடுத்து நிறுத்தினர்.

Update: 2021-01-22 22:17 GMT
பெலகாவி,

கர்நாடகம்-மராட்டிய மாநில எல்லைப்பகுதியில் பெலகாவி மாவட்டம் அமைந்து உள்ளது. பெலகாவியில் ஏராளமான மராட்டியர்கள் வசித்து வருகின்றனர். இதனால் பெலகாவியை தங்களுக்கு உரியது என்று மராட்டியம் சொந்தம் கொண்டாடி வருகிறது.

ஆனால் பெலகாவி கர்நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், பெலகாவியை எக்காரணம் கொண்டும் விட்டு தர மாட்டோம் எனவும் கர்நாடகம் கூறி வருகிறது. இதுதொடர்பாக கர்நாடகம்-மராட்டியம் இடையே நீண்ட காலமாக பிரச்சினை உள்ளது. சமீபத்தில் கூட பெலகாவியை மராட்டியத்துடன் இணைப்போம் என்று மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார். அவருக்கு கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கன்னட கொடியை அகற்ற...

இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெலகாவியில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு கன்னட அமைப்பினர் கன்னட கொடியை ஏற்றி இருந்தனர். இதற்கு மராட்டியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏற்றப்பட்ட கன்னட கொடியை அகற்ற வேண்டும் என்று மராட்டியர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பெலகாவி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏற்பட்ட கன்னட கொடியை அகற்றிவிட்டு அங்கு மராட்டிய கொடியை கட்டுவோம் என்று சிவசேனா கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

பெலகாவிக்குள் நுழைய முயற்சி

அதன்படி நேற்று மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சிவசேனா கட்சியினர் மராட்டிய கொடியை கையில் ஏந்தியபடி பெலகாவி நோக்கி வந்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் பெலகாவி-கோலாப்பூர் எல்லையில் உள்ள சின்னோலி சோதனை சாவடியில் 200 வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த சிவசேனா கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.

மேலும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதற்கிடையே சிலர் மராட்டிய கொடியை கையில் ஏந்தியபடியே எல்லையை தாண்ட முயன்றனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் சிவசேனா கட்சியினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தால் பெலகாவி-கோலாப்பூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்