மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி இளம்பெண் சாவு; மேல்மருவத்தூர் தைப்பூச விழாவுக்கு வந்தபோது சோகம்

மேல்மருவத்தூர் தைப்பூச விழாவுக்கு குழுவினருடன் வந்த இளம்பெண் மாமல்லபுரம் சென்று அங்குள்ள கடலில் குளித்தபோது அதில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-01-23 01:13 GMT
உமா மகேஸ்வரி
சுற்றுலா வந்தனர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ஆன்மிக பக்தர்கள் 50 பேர் சேர்ந்து ஒரு குழுவாக மேல்மருத்தூரில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 10 நாட்களாக நடந்து வரும் தைப்பூச விழாவுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர்.

அங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர்.

சாவு
அவர்களில் சிலர் அங்குள்ள கடலில் குளித்தனர். அப்போது குளித்து கொண்டிருந்த பொள்ளாச்சி நகரத்தை சேர்ந்த உமாமகேஸ்வரி (வயது 23) என்ற பெண்ணை ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. இதில் மூச்சு திணறி அவர் பரிதாபமாக இறந்தார்.

சிறிது நேரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

போலீசார் எச்சரிக்கை
தகவலறிந்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் குளித்து கொண்டிருந்த மற்ற பக்தர்களை எச்சரித்து கரைக்கு வரும்படி அறிவுறுத்தினர். துயர சம்பவம் அவர்கள் கண் முன் நடந்தும் போலீசாரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் பலர் அலட்சிய போக்குடன் கடலில் குளித்து கொண்டிருந்தனர். போலீசார் கரைக்கு திரும்பி வாருங்கள் என்று கடுமையாக எச்சரித்த பிறகு பலர் கடலில் குளிப்பதை நிறுத்திவிட்டு கரைக்கு திரும்பினர்.

உமாமகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த துயர சம்பவத்தால் ஆன்மிக யாத்திரை பயணத்தை ரத்து செய்துவிட்டு பொள்ளாச்சி பக்தர்கள் அனைவரும் சோகத்துடன் சொந்த ஊர் திரும்பினர்.

மேலும் செய்திகள்