மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி உரிமையாளர் காருடன் மாயமான கடை ஊழியர் கைது

கோபி அருகே மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி கடை உரிமையாளர் காருடன் மாயமான ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-23 22:32 GMT
கடத்தூர்
கோபி அருகே மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறி கடை உரிமையாளர் காருடன் மாயமான ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
காருடன் மாயமான வாலிபர்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டடிபாளையம் காலேஜ் ரோட்டில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் சுகுமார் (வயது 39). இவரது கடையில் திருநெல்வேலியை சேர்ந்த லட்சுமணன் (28) என்பவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் சுகுமாரிடம்  தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. எனவே அவரை அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல உங்கள் கார் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
உடனே சுகுமாரும் தனது காரை லட்சுமணனிடம் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து லட்சுமணன் காரை அங்கிருந்து ஓட்டி சென்றுள்ளார். ஆனால் காருடன் சென்ற லட்சுமணன்  கடைக்கு திரும்பவில்லை. இதனால் சுகுமார் அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று பதில் வந்தது. அப்போது தான் லட்சுமணன் காருடன் மாயமானது தெரிய வந்தது.
கைது
இதுகுறித்து சுகுமார்  கோபி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து, காருடன் மாயமான லட்சுமணனை வலைவீசி தேடி வந்தார். இந்த நிலையில், கோபி பஸ்நிலையம் அருகே போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு காருடன் ஒருவர் வந்து கொண்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் அவரது காரை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, அவர் லட்சுமணன் என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது சுகுமாரின் கடையில் வேலை பார்த்தபோது அவரது காருடன் மாயமானதை் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து கார் மீட்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லட்சுமணனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்