‘ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலை ரசிகர்கள் பின்பற்ற வேண்டும்’ அர்ஜூன் சம்பத் பேட்டி

‘நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலை ரசிகர்கள் பின்பற்ற வேண்டும்’ என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

Update: 2021-01-23 23:17 GMT
நெல்லை,

நெல்லையில் இந்து மக்கள் கட்சி சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆம்புலன்ஸ் வேன் அர்ப்பணிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட நேதாஜி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆம்புலன்ஸ் வேன் சேவையையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

நெல்லையில் உள்ள முத்துராமலிங்க தேவர், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார்.

பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்மிக அரசியல்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவை மத்திய அரசு கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மறைக்கப்பட்டு வரும் அவரது வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும். ரூபாய் நோட்டுகளிலும் அவரது படத்தை அச்சிட வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் சரியில்லாததால் அரசியலுக்கு வரவில்லை என்றுதான் தெரிவித்துள்ளார். அவரது ஆன்மிக அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. எனவே, அவரது ஆன்மிக அரசியல் பயணத்தை அவரது ரசிகர்கள் பின்பற்ற வேண்டும்.

ஆனால், தி.மு.க.வினர் திட்டமிட்டு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை தங்களது கட்சியில் இணைத்துக்கொண்டு, ரஜினி மக்கள் மன்றம் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருப்பது போன்ற மாயத்ேதாற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

இலங்கை தமிழர்களுக்குதனி நாடு

வெளிநாட்டில் இருந்து வந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமலே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட்டார். தற்போது 2-வது முறையாகவும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது தேர்தல் பிரசார பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

கச்சத்தீவை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபடுவதற்காக வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்றார். நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினத்தன்று கச்சத்தீவில் இந்தியா தேசிய கொடியேற்ற வேண்டும்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி முஸ்லிம்களுக்காக பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசத்தை பிரித்து தனி நாடு உருவாக்கி கொடுத்தது போன்று, பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் இருந்து தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்கி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நெல்லை வண்ணார்பேட்டையில் அர்ஜூன் சம்பத்துக்கு நிர்வாகிகள், வேல் வழங்கி வரவேற்றனர். நிர்வாகிகள் ராஜபாண்டி, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்