பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சொத்து பிரச்சினையில் தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன் கைது

குன்னம் அருகே சொத்து பிரச்சினையில் தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-01-24 01:53 GMT
கைது செய்யப்பட்ட தினேஷ்குமார்; கொலை செய்யப்பட்ட கருப்பையா பிணமாக கிடந்த காட்சி.
சொத்து பிரச்சினை
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 60). இவருக்கு பழனியம்மாள் என்ற மகளும், தினேஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.

சொத்து தொடர்பாக கருப்பையாவுக்கும், அவரது மகன் தினேஷ் குமாருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் தந்தை, மகன் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதைஅறிந்த கருப்பையாவின் தம்பி பழனிசாமி இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தார்.

குத்திக்கொலை
ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தினேஷ்குமார் தனது கையில் வைத்திருந்த கத்தியால் கருப்பையாவின் வயிற்றில் குத்தினார். தொடர்ந்து, தடுக்க முயன்ற பழனிசாமியின் கை, கால்களிலும் கத்தியால் குத்திவிட்டு தினேஷ்குமார் தப்பி ஓடிவிட்டார். நள்ளிரவில் யாரும் இல்லாததால் பழனிசாமியும், கருப்பையாவும் மருத்துவமனைக்கு நடந்து சென்றனர். அப்போது, வழியில் ரத்தம் அதிகம் வெளியேறியதால் கருப்பையா மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

வலைவீச்சு
இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கருப்பையாவின் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பழனிசாமி சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்