பெரம்பலூரில் ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி; பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை

பெரம்பலூரில் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பணிச்சுமை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-01-24 02:02 GMT
கோகிலா
மயங்கி விழுந்தார்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் மேட்டூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி கோகிலா (வயது 41). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோகிலா 2003-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார்.

தற்போது அவர் குடும்பத்தினருடன் பெரம்பலூர் தண்ணீர் பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் தங்கியிருந்து, ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சியில் கலந்து கொண்ட கோகிலா திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக போலீசார், முகத்தில் தண்ணீரை தெளித்து அவரை எழுப்பி, விசாரித்தனர்.

பணிச்சுமை காரணமா?
விசாரணையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் கோகிலா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இதையடுத்து கோகிலாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். மேலும் ஆயுதப்படையில் உயர் அதிகாரிகளால் பணிச்சுமை அதிகமாக இருப்பதாக, அங்கு பணிபுரியும் போலீசார் புலம்பி வருகின்றனர்.

இதனால் கோகிலா பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்