திருவாரூர் பகுதி புறவழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டது தயாநிதிமாறன் எம்.பி. குற்றச்சாட்டு

திருவாரூர் பகுதி புறவழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டது என தயாநிதிமாறன் எம்.பி. கூறினார்.

Update: 2021-01-24 02:12 GMT
திருவாரூர்,

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிகளில் தயாநிதிமாறன் எம்.பி. பிரசாரம் செய்தார். முன்னதாக திருவாரூர் ஒன்றியம் புலிவலம், மாவூரில் மக்களை சந்தித்து தயாநிதிமாறன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

துரோகம்

கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் இருண்டு கிடக்கிறது. தி.மு.க. ஆட்சியில் திருவாரூர் பகுதி புறவழிச்சாலை அமைக்க திட்டமிட்டு கடந்த 2011-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. ஆனால் அதற்கு பின் வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு இ்ந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை. தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து ஒட்டு மொத்த மக்களுக்கு துரோகம் செய்துள்ளார்.

வெற்றி

ஜெயலலிதா சாவில் மர்ம இருப்பதாக கூறியவர் ஓ.பன்னீர் செல்வம் தான். ஆனால் இதுவரை அந்த மர்மம் அகலவில்லை. வருகி்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மக்கள் வாக்களித்து தி.மு.க.வை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா, திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ., உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து ஆப்பரக்குடி, மணலி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து தயாநிதிமாறன் எம்.பி. பிரசாரம் செய்தார்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற தலைப்பில் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தயாநிதிமாறன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலா காலில் விழுந்து முதல்- அமைச்சர் பதவியை பெற்ற எடப்பாடி பழனிசாமி இன்று எனக்கு கடவுள் கொடுத்த ஆட்சி என்று கூறுகிறார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் கண்டுபிடிக்கப்படவில்லை.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் தருவதாக கூறிவிட்டு அதிலும் குளறுபடி செய்து மக்களை ஏமாற்றுகிறார். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி தி.மு.க. நகர செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன், தி.மு.க.. விவசாய அணி மாநில செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்