ஒப்பந்தகாலம் முடிந்ததால் மீண்டும் பணி வழங்கக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 500 ஊழியர்கள் திரண்டதால் பரபரப்பு

ஒப்பந்தகாலம் முடிந்ததால் மீண்டும் பணி வழங்கக்கோரி பணிநிரவல் செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அண்ணாமலை பலகலைக்கழகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-01-24 04:01 GMT
அண்ணாமலைநகர்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க கூட முடியாத அளவிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு அரசு அலுவலகங்கள், அரசு கல்லூரிகளுக்கு பணி நிரவல் செய்யப்பட்டனர்.

3 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பணி நிரவல் செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக திரண்டனர்.

3 ஆண்டு ஒப்பந்தம் முடிந்தது

இது குறித்து பணிநிரவல் செய்யப்பட்ட ஊழியர்கள் கூறியதாவது:-

மிகக் குறைவான ஊதியம் பெறும் கடைநிலை ஊழியர்களாகிய எங்களை எந்த கலந்தாய்வும் செய்யாமல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு அலுவலகங்களில் பணி அமர்த்தினார்கள். இதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, குடும்பத்தை விட்டு தனியே வசிக்க வேண்டிய நிலை, பெற்றோர் மற்றும் குழந்தைகளை கவனிக்க முடியாத காரணங்களால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

ஒப்பந்த காலம் முடிந்தும் மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி வழங்காமல் நிதிநிலையை காரணம் காட்டி மேலும் ஓராண்டு ஒப்பந்த காலத்தை நீட்டித்தனர். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் அதிகரித்துள்ளது. ஆகையால் 3 ஆண்டு கால ஒப்பந்த நிபந்தனைப்படி எங்களுக்கு மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி வழங்க வேண்டும் என கோரி மனு அளிப்பதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தனித்தனியாக பதிவாளர் ஞானதேவனிடம் மனு அளித்தனர். ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு இருந்ததால் பல்கலைக்கழக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்