கடலூரில், குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

கடலூரில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-01-24 04:03 GMT
கடலூர்,

நாட்டின் 72-வது குடியரசு தின விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.

ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் குடியரசு தின விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

மேலும் பொதுமக்கள் கலந்து கொள்ளவும் அனுமதி கிடையாது. இதனால் பொதுமக்கள் குடியரசு தின விழாவை கண்டுகளிக்கும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அதுபோல் சுதந்திர போராட்ட தியாகிகளை நேரில் வரவழைத்து சமூக இடைவெளியுடன், கவுரவிக்கப்பட உள்ளனர். மேலும் அரசு பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழும், நலத்திட்ட உதவிகளும் சமூக இடைவெளியை கடைபிடித்து வழங்கப்படுகிறது.

கலெக்டர் ஆய்வு

இதற்கிடையே குடியரசு தின விழா நடைபெறும் அண்ணா விளையாட்டு மைதானத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை நேற்று இரவு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்விடம், குடியரசு தின விழாவை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், போலீசாரின் அணி வகுப்பு மரியாதை குறித்தும் கேட்டறிந்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் அதிகாரிகள், போலீசார் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்