சாலை அமைக்கக்கோரி தே.பவழங்குடி கிராம மக்கள் சாலை மறியல்

சாலை அமைக்கக்கோரி தே.பவழங்குடி கிராம மக்கள் சாலை மறியில் ஈடுபட்டனர்.

Update: 2021-01-24 04:05 GMT
விருத்தாசலம்,

கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தே.பவழங்குடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்குள் நுழையும் சாலையில் குறிப்பிட்ட 200 மீட்டருக்கு மட்டும் கடந்த 50 ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாமல் உள்ளது. மண் சாலையாக உள்ளதால் மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியில் அதிகாரிகள் சாலை அமைக்க முற்படுவதும், தனிநபர் ஒருவர், அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று தடுத்து நிறுத்துவதும், பின்னர் சாலை அமைக்காமல் வி்ட்டுவிடுவதுமாக உள்ளது. ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை.

மறியல் போராட்டம்

இந்த நிலையில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சாலை அமைப்பதற்காக அதிகாரிகள் நேற்று சாலையை அளவீடு செய்தனர். அப்போது தனிநபர் ஒருவர், அங்கு வந்து இந்த இடம் எங்களுடைய பட்டாவில் உள்ளது, அதனால் அளவிட செய்யக்கூடாது என தடுத்து நிறுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தே.பவழங்குடி பஸ் நிறுத்தத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம் விரைந்து வந்து, குறிப்பிட்ட இடத்தை சர்வேயர் மூலம் அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை ஏற்ற கிராம மக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்