கொச்சி துறைமுகத்தில் குமரி மீனவர்கள் மீது தாக்குதல் சமூக வலைதளங்களில் வெளியான காட்சியால் பரபரப்பு

கொச்சி துறைமுகத்தில் குமரி மீனவர்கள் மீது கேரள கும்பல் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-01-24 05:14 GMT
கொல்லங்கோடு,

குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் அதிகமானோர் கொச்சி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு பல ஆண்டுகளாக மீன்பிடித்து வருகின்றனர்.

சாதாரணமாக இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்துவது உண்டு. ஆனால் நேற்று முன்தினம் இரவில் குமரி மீனவர்கள் மீது கேரள கும்பல் தாக்குதல் நடத்திய காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.

பரபரப்பு

அதாவது குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் பென்சீகர் என்பவருக்கு சொந்தமான மேரி மாதா என்ற விசைபடகில் கொச்சி துறைமுகப்பகுதியில் குமரி மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது அருகில் இருந்த கேரள கும்பல் படகிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் காரணம் ஏதும் இல்லாமல் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை குமரி மாவட்ட மீனவ சங்க நிர்வாகிகள் வலியுறுத்தும் பதிவும் இடம் பெற்று இருந்தது. இந்த சமூக வலைதள பதிவு குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீனவ சங்க நிர்வாகிகள், வெளிநாடுகளில் தான் மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை என்று பார்த்தால், இந்தியாவிலேயே, அதுவும் அண்டை மாநிலங்களிலும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை இந்த வீடியோ காட்சி உணர்த்துவதாக கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்