ஏற்கனவே தற்கொலை முயற்சியில் மனைவி, பிள்ளைகளை இழந்தவர்: கடன் தொல்லையால் பிளம்பர் தற்கொலை

கடன் தொல்லையால் ஏற்கனவே தற்கொலை முயற்சியில் தனது மனைவி, பிள்ளைகளை இழந்த பிளம்பர், 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது 75 வயதான தந்தை அனாதையாக தவித்து வருகிறார்.

Update: 2021-01-24 23:33 GMT
பழனி
பிளம்பர் தற்கொலை
சென்னை திரு.வி.க.நகரை அடுத்த வெற்றி நகர் ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் பழனி (வயது 46). பிளம்பர் தொழில் செய்து வந்தார். இவர், நேற்று காலை தனது வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அவரது தந்தை சண்முகம் அளித்த புகாரின்பேரில் திரு.வி.க.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தற்கொலை செய்த பழனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மனைவி, பிள்ளைகள் சாவு
விசாரணையில் பழனிக்கு, பவானி(40) என்ற மனைவியும், தேவதர்ஷினி(17) என்ற மகளும், பிரகதீஷ்(11) என்ற மகனும் இருந்தனர். பழனி தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 17-ந்தேதி பழனி, தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவருடைய மனைவி பவானி, மகள் தேவதர்ஷினி, மகன் பிரகதீஷ் 3 பேரும் இறந்துவிட்டனர். வீட்டில் வளர்த்து வந்த நாய்க்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டனர்.

ஆனால் பழனி மட்டும் உயிர் தப்பினார். பின்னர் கத்தியால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைக்கு பிறகு காப்பாற்றப்பட்டார்.

மனஉளைச்சல்...
தற்கொலை முயற்சியில் மனைவி, பிள்ளைகளை இழந்து கடும் மனஉளைச்சலில் இருந்து வந்த பழனி, கடந்த 3 மாதங்களாக திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தந்தை சண்முகத்தை பார்த்துவிட்டு வருவதாக கூறி திரு.வி.க.நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த பழனி, மனைவி, பிள்ளைகள் இறந்து 3 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தனது ஒரே மகனின் கண்காணிப்பில் வாழ்ந்து வந்த பழனியின் 75 வயதான தந்தை சண்முகம், தற்போது தனது மகன், மருமகள், பேத்தி, பேரனை இழந்து அனாதையாக தவிப்பது கண்டு அக்கம் பக்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்