ஊத்துக்கோட்டையில் வெள்ளத்தில் சேதமடைந்த தரைப்பாலம் சீரமைப்பு; பஸ் போக்குவரத்து தொடக்கம் பொதுமக்கள் மகிழ்ச்சி

ஊத்துக்கோட்டையில் வெள்ளத்தில் சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு 2 மாதத்துக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-01-27 04:59 GMT
ஊத்துக்கோட்டை,

நிவர் புயல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் உள்ள ஆரணியாறு அணை முழுவதுமாக நிரம்பியதால் கடந்த நவம்பர் மாதம் 25-ந்தேதி ஆரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுதது ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள ஆரணி ஆற்றில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டது. இதனால் 50 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

பஸ் போக்குவரத்து தொடக்கம்

இநத நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் கிழக்கு திசையில் தற்காலிக செம்மண் சாலை அமைக்கப்பட்டது. இதன் வழியாக தற்போது ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போக்குவரத்து மட்டும் நடைபெற்று வந்தது. பஸ்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதையில் சென்று வந்தன. ஆரணி ஆற்றில் தற்போது வெள்ளம் முழுவதுமாக வற்றி விட்டதால் தரைப்பாலம் சீரமைப்பு பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தன. நேற்று முன்தினம் இரவு பணிகள் முடிவடைந்தன. இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் தரைப்பாலத்தில் பஸ் போக்குவரத்துக்கு போலீசார் அனுமதித்தனர்.

2 மாதத்திற்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியதால் பயணிகள், கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். தரைப்பாலத்தில் சரக்கு லாரி போக்குவரத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

மேலும் செய்திகள்