தைப்பூசத்தையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தெப்பத்திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தைப்பூசத்தையொட்டி தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-01-29 05:15 GMT
நாகப்பட்டினம்,

சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசத்தையொட்டி தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி தைப்பூசத்தையொட்டி நேற்று காலை, சிக்கல் சிங்காரவேலவருக்கு, மஞ்சள், பால், பன்னீர், திரவியம், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இரவு கோவிலில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. முன்னதாக கோவிலின் மேற்குவாசல் வழியாக சாமி புறப்பாடு நடந்தது.

பின்னர் சிங்காரவேலவர், வள்ளி, தெய்வானையுடன் முத்தங்கி அலங்காரத்தில், தங்கப்படிச் சட்டத்தில் தெப்பத்துக்கு எழுந்தருளினார். குளத்தின் கிழக்கு கரையில் இருந்து வலம் வரத்தொடங்கிய தெப்பம், 4 கரைகளையும் 3 முறை வலம் வந்து நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமருகல்

திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு அயவந்தீஸ்வரர் மற்றும் முருகனுக்கு மஞ்சள், பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தயிர், பச்சரிசிமாவு, திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து அயவந்தீஸ்வரர் சன்னதி முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வாய்மேடு

வாய்மேடு பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.முன்னதாக சாமிக்கு பால், தயிர், இளநீர், திருநீறு, நெய் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

வேதாரண்யம்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சிறிய வெள்ளி ரி‌‌ஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து மாசிமக விழாவுக்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும், விழா தொடர்பான பட்டோலை வாசிக்கும் நிகழ்ச்சியும்(விழாவில் நடைபெறும் நிகழ்வு குறித்து விவரங்கள் அடங்கிய வாசகங்களை படிப்பது) நடைபெற்றது. அதை தொடர்ந்து ரி‌‌ஷப வாகனத்தில் எழுந்தருளிய விநாயகர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வேதாமிர்த ஏரியில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

மேலும் செய்திகள்