தென்காசியில் கலெக்டர் அலுவலகத்தை விசைத்தறி தொழிலாளர்கள் முற்றுகை

தென்காசியில் கலெக்டர் அலுவலகத்தை விசைத்தறி தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-01-29 21:39 GMT
கலெக்டர் அலுவலகம் முற்றுகை
சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் தொழிலாளர்கள் நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நூல் விலை உயர்வு
சங்கரன்கோவில் நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் 4 ஆயிரம் விசைத்தறிகளை நம்பி சுமார் 20 ஆயிரம் குடும்பத்தினரும், தமிழகம் முழுவதும் உள்ள 6 லட்சம் விசைத்தறிகளை நம்பி 30 லட்சம் குடும்பத்தினரும் வாழ்ந்து வருகிறார்கள். சங்கரன்கோவிலில் நாளொன்றுக்கு ரூ.67 லட்சம் துணி உற்பத்திக்கு மாதமொன்றுக்கு ரூ.1 கோடி வரையிலும் சரக்கு சேவை வரியாக செலுத்துகின்றனர்.

இந்த நிலையில் துணி உற்பத்திக்கு மூலப்பொருளான 60-ம் எண் கோன் நூலுக்கு அதிக விலை கிடைக்கிறது என்பதற்காக வெளிநாடுகளுக்கு பெரிதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் கைத்தறிக்கு அடுத்தபடியாக உள்ள சாதாரண விசைத்தறிகளில் பயன்படுத்தப்படும் ஹேங்க் நூலின் விலையும் கடந்த செப்டம்பர் முதல் தற்போது வரை மில்களின் தன்னிச்சையான முடிவின்படி ரூ.390 உயர்ந்துள்ளது.
முத்தரப்பு குழு
நூல் விலை உயர்வினால் சேலைகளின் விலையை ரூ.45 என உயர்த்தியாக வேண்டும் என்றாலும் ஏற்கெனவே ஜி.எஸ்.டி., கொரோனா தாக்கம் ஆகியவற்றால் மிகவும் குறைந்து போன எங்களது வியாபாரம் மேலும் குறைந்து வருகிறது.

கைத்தறி போன்று அரசிடமிருந்து கடனுதவி, மானியம் போன்றவைகள் இல்லாமல் தொழில் செய்யும் எங்களுக்கு இந்த விலை உயர்வு மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே நூல் ஏற்றுமதி செய்வதை தடுக்க வேண்டும். நெல், கரும்பு போன்றவற்றிற்கு அடிப்படை ஆதார விலை நிர்ணயம் செய்வது போன்றும், சிமெண்டு விலை உயர்வை கட்டுப்படுத்துவது போன்றும் நடவடிக்கை எடுத்து நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
இவற்றை செய்யாவிட்டால் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பிப்ரவரி மாதம் முதல் நூல் கொள்முதல் செய்வதில்லை என்றும், காலவரையற்ற உற்பத்தி நிறுத்தம் செய்வது எனவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்