நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காக ஆத்துப்பாளையம் அணை திறப்பு

நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காக ஆத்துப்பாளையம் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-01-31 05:56 GMT
ஆத்துப்பாளையம் அணையிலிருந்து தண்ணீரை கே பரமத்தி ஊராட்சி ஒன்றிய தலைவர் மார்க்கண்டேயன் திறந்து வைத்த போது எடுத்த
க.பரமத்தி:
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், கார்வழி அஞ்சூர் ஊராட்சிக்கு இடையில் ஆத்துப்பாளையம் அணை உள்ளது. இந்த அணை க.பரமத்தி ஒன்றியம், கரூர் ஒன்றிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி விவசாயத்தை பெருக்க எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணை 27 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் 235 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கி வைக்கலாம். 
இந்த அணை மூலம் கரூர், க.பரமத்தி ஒன்றியங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து சுமார் 19 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும். இதனையடுத்து கடந்த மாதம் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 26 அடியை எட்டியது. இதன் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் தண்ணீர் திறக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். 
தண்ணீர் திறப்பு
இதனையடுத்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் க.பரமத்தி ஒன்றிய தலைவர் மார்க்கண்டேயன் அணையின் மதகை திறந்தார். இதன் மூலம் 70 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஐந்து நாளைக்கு திறக்கப்படும். பிறகு ஐந்து நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் 70 கன அடி தண்ணீர் திறக்கப்படும். 
இந்த நீர் மார்ச் மாதம் வரை இடைவெளிவிட்டு திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகானந்தம், பொறியாளர் சுப்பிரமணியன், அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்