வேலூர் மாவட்டத்தில் 1¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 581 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

Update: 2021-01-31 22:15 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 581 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆரம்ப சுகாதார நிலைய இணைஇயக்குனர் சுரேஷ், மாநகராட்சி கமிஷனர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு 1995-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 581 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 899 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பஸ், ரெயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள், போக்குவரத்து வசதிகள் குறைவான மலைப்பகுதிகளில் முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் பல்வேறு அரசுத்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 3 ஆயிரத்து 555 பணியாளர்களும், 110 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பச்சிளங் குழந்தைகள் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து எத்தனைமுறை போடப்பட்டிருந்தாலும் இந்த முறையும் அவசியம் சொட்டு மருந்து போட வேண்டும். 
இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அதைத்தொடர்ந்து இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் வேலூர் பழைய பஸ்நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கு கலெக்டர் சொட்டு மருந்து அளித்து பலூன், பொம்மைகள் வழங்கி பேசினார்.

முகாம்களில், ரெட்கிராஸ் சங்க துணைத்தலைவர் வெங்கடசுப்பு, செயலாளர் வக்கீல் பி.டி.கே.மாறன், பொருளாளர் டி.எஸ்.உதயசங்கர், செயற்குழு உறுப்பினர் உதயசங்கர், மாநகராட்சி நலஅலுவலர் சித்ரசேனா, உதவி கமிஷனர் மதிவாணன், தாசில்தார் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்