ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக சென்னையில் தடையை மீறி யார் பேனர் வைத்தாலும் கடும் நடவடிக்கை

சென்னை ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக, சென்னையில் தடையை மீறி யார் பேனர் வைத்தாலும் கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.

Update: 2021-02-08 04:27 GMT
சென்னை, 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-பைக் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று நடந்தது.

இதில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கலந்துகொண்டு, விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

5 ஆயிரம் சைக்கிள்கள்

தற்போது 100 இடங்களில் 1,500 என்ற எண்ணிக்கையில் சைக்கிள்கள் இருக்கின்றன. இன்னும் சில மாதங்களில் 500 இடங்களில் 5 ஆயிரம் சைக்கிள்கள் வைப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை பங்களிப்பு எனும் அடிப்படையில் தனியார் கம்பெனிகளுடன் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம். கடந்த வாரம் பேட்டரியில் இயங்கும் சைக்கிள்களை முதல்-அமைச்சர் அறிமுகம் செய்து தொடங்கிவைத்தார்.

அந்தவகை சைக்கிள்களில், பெடல் உதவியுடன் சைக்கிளில் பயணிக்கலாம். சில சமயம் ஆக்ஸிலேட்டர் பயன்படுத்தி பேட்டரியில் உள்ள சார்ஜ் அடிப்படையில் சைக்கிள்களை இயக்கலாம். வரும் நாட்களில் இந்த திட்டத்தை இன்னும் வேகமாக கொண்டு செல்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய இ-பைக்குகளுக்கு சார்ஜ் போடுவதற்காக அந்தந்த நிலையங்களிலேயே சூரிய ஒளி மூலம் சார்ஜ் உற்பத்தி செய்யும் எந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகின்றன. விரைவில்அந்தபணிகளும் தொடங்கப்படும்.

பேனர் வைத்தால் நடவடிக்கை

பேனர் விவகார வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் நடைமுறை பணிகள் குறித்த தகவல்கள் புள்ளி விவரங்களுடன் சென்னை ஐகோர்ட்டுக்கு அவ்வப்போது சமர்ப்பித்து வருகிறோம். பேனர் வைக்கவேண்டும் என்று முறையாக விண்ணப்பித்தால்கூட, அதற்கு அனுமதி அளிக்கமுடியாத சூழல் தான் உள்ளது. அந்தவகையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சென்னை நகரில் பேனர் வைக்க தடை உள்ளது.

எனவே எந்த அரசியல் கட்சிகள், சுப நிகழ்ச்சிகள், தனிப்பட்ட சொந்த விருப்பத்தின்கீழ் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், கம்பெனிகள் சார்பில் நடக்கும் நிகழ்வுகள் என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சென்னையில் பேனர் வைப்பதற்கு தடை இருக்கிறது. தடையை மீறி யார் பேனர் வைத்தாலும் அவர்கள் மீது அதற்குரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்.

டெண்டர் முறைகேடு இல்லை

அதேவேளை மெரினாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் அமைப்பதற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. அனைத்து நடவடிக்கைகளும் முறையாகவே நடந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்