காட்டுத்தீயில் 5 ஏக்கரில் புல் கருகியது

கூடலூர் அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் 5 ஏக்கரில் புல் கருகியது. தீ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Update: 2021-02-09 17:05 GMT
புல்லில் ஏற்பட்ட தீயை வனத்துறையினர் அணைத்தபோது எடுத்தபடம்
கூடலூர்

கூடலூர் அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் 5 ஏக்கரில் புல் கருகியது. தீ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. 

புல்வெளியில் காட்டுத்தீ

கூடலூர் பகுதியில் பகலில் வெயிலும், இரவில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள புல்வெளிகள் கருகி வறட்சி நிலவுகிறது. மேலும் இரு வேறு காலநிலையால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கவுண்டங்கொல்லியில் வனத்துறைக்கு சொந்தமான புல்வெளி பகுதியில் நேற்று திடீரென காட்டுத் தீ பரவியது. 

இது குறித்து தகவல் அறிந்த வனக் காப்பாளர்கள் சிவகுமார், பிரேம், பிரகாஷ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

போராடி அணைத்தனர் 

இந்த சமயத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதனால் வனத்துறையினரால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் பல்வேறு கட்டமாக போராடி 2 மணி நேரத்துக்குப் பிறகு தீயை வனத்துறையினர் கட்டுப்படுத்தினர். 
இருப்பினும் 5 ஏக்கரில் உள்ள புல்வெளி தீயில் கருகியது. இந்த தீ காரணமாக குருவிகள், பூச்சியினங்கள் உள்ளிட்ட சிறு வன உயிரினங்களும் மடிந்தன. இந்த காட்டுத்தீ எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் தொடங்கி மே மாதம் வரை பனிப்பொழிவு மற்றும் கோடை காலம் என்பதால் வறட்சியின் தாக்கம் அதிகமாக காணப்படுவது வழக்கம். வனப்பகுதியும் பசுமை இழந்து காணப்படும். இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு வனத்துக்கு தீ வைத்து விடுகின்றனர். 

அவ்வாறு தடையை மீறி தீவைப்பது வன சட்டத்தின்படி குற்றமாகும். எனவே பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இனி வரும் நாட்களில் வனத்துக்கு தீ வைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்