மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் கால்களில் காயம்பட்ட திருக்குறுங்குடி யானை அவதி; மருத்துவ குழுவினர் சிகிச்சை

மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் கால்களில் காயம்பட்டு அவதியடைந்து வரும் திருக்குறுங்குடி யானைக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Update: 2021-02-09 22:12 GMT
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. 

 முகாமில் மொத்தம் 26 யானைகள் கலந்துகொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன. இந்த யானைகளுக்கு காலை, மாலையும் நடைப்பயிற்சி ஆனந்த குளியல் சமச்சீர் உணவு, பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

யானைகளின் மருத்துவ சிகிச்சைக்காக முகாமில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினர் காலை, மாலை 2 வேளையும் யானைகளை பரிசோதனை செய்து உரிய மருந்து, மாத்திரைகளை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் (ஜீயர் மடம்) திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் யானை குறுங்குடி வள்ளி பின்னங்கால்களில் சிராய்ப்பு காயத்தால் அவதிப்பட்டு வருகிறது. 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் திருக்குமரன் தலைமையில் உதவி மருத்துவர்கள் வசந்த், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாகன்கள் உதவியுடன் குறுங்குடி வள்ளி யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

மேலும் செய்திகள்