தனியார் நிதி நிறுவனத்தில் 28 பவுன் நகையை திருடிவிட்டு போலி நகைகளை வைத்து மோசடி - கள்ளக்காதலியுடன் வாலிபர் கைது

தனியார் நிதி நிறுவனத்தில் 28 பவுன் நகையை திருடிவிட்டு அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்து மோசடி செய்த வாலிபரை, அவரது கள்ளக்காதலியுடன் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-11 06:25 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் நேரு நகரைச் சேர்ந்தவர் ஜெயகர் (வயது 42). இவர், ஆவடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இங்கு வாடிக்கையாளர்கள் தங்கள் நகைகளை விற்று, பணம் பெற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறு வாடிக்கையாளர்கள் விற்ற 986.25 கிராம் தங்க நகையை கடையின் ஊழியரான கொரட்டூர் ரெயில்வே ஸ்டேஷன் சாலையை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவர் தி.நகரில் உள்ள அதன் கிளை அலுவலகத்தில் ஒப்படைத்தார். அவை பெங்களூருவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அந்த நகைகளில் 28 பவுன் போலி நகைகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயகருக்கு தகவல் கொடுத்தனர். அவர், சதீஷ்குமாரை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சதீஷ்குமாரை கைது செய்தனர். விசாரணையில் அவர், ஆவடியில் உள்ள நிறுவனத்தில் இருந்து தி.நகரில் உள்ள நிறுவனத்துக்கு நகைகளை கொண்டு செல்லும் வழியில் அதில் இருந்து 28 பவுன் நகைகளை திருடிக்கொண்டு அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்து மோசடி செய்தது தெரிந்தது.

இவ்வாறு திருடிய நகைகளை கொரட்டூரை சேர்ந்த தனது கள்ளக்காதலி ஷோபா (40) என்பவரிடம் கொடுத்துள்ளார். அவர், அதை அதேபகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற கண்ணன் (34) என்பவரிடம் கொடுத்து பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து சதீஷ்குமார், ஷோபா மற்றும் கண்ணன் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 28 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்