சாமி கும்பிடுவதற்காக விளக்கை பற்ற வைத்த போது பரிதாபம் தஞ்சையில், ஓய்வு பெற்ற ஆசிரியை தீயில் கருகி சாவு

தஞ்சையில் சாமி கும்பிடுவதற்காக விளக்கை பற்ற வைத்த போது ஓய்வு பெற்ற ஆசிரியை தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-02-13 17:57 GMT
தஞ்சாவூர்:-
தஞ்சையில் சாமி கும்பிடுவதற்காக விளக்கை பற்ற வைத்த போது ஓய்வு பெற்ற ஆசிரியை தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.
ஓய்வு பெற்ற ஆசிரியை 
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள சுந்தரம் நகரை சேர்ந்தவர் கோபாலகிரு‌‌ஷ்ணன். இவருடைய மனைவி பிரேமா(வயது76). இவர்கள் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டனர்.  இவர்களுடைய மகன்களுக்கு திருமணம் ஆகி வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வசித்து வருகிறார்கள்.
உடலில் தீப்பிடித்தது
சம்பவத்தன்று கோபாலகிரு‌‌ஷ்ணன், வேலை தொடர்பாக வெளியே செல்வதாக கூறி விட்டு சென்று விட்டார். வீட்டில் பிரேமா மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவர் வீட்டை உள்பக்கமாக தாழிட்டுக்கொண்டு சாமி கும்பிடுவதற்காக சென்றார். 
பின்னர் அவர் அங்கிருந்த சாமி விளக்கை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக அவருடைய ஆடையில் தீப்பற்றியது. சில நொடிகளில் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
தீயில் கருகி சாவு 
இதனால் தீயின் கொடுமை தாங்காத பிரேமா அய்யோ..அம்மா.. என அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து வீட்டின் கதவை உடைத்து அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைதம்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்