கடலூர், விருத்தாசலத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

அரியர் தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடலூர் மற்றும் விருத்தாசலத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-02-13 18:36 GMT
கடலூர், 

கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பிரிவுகளில் மொத்தம் 5,200 மாணவர்கள் படித்து வருகின்றனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில், இக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்தப்படவில்லை. இதற்கிடையே அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும், தேர்வு எழுதாமலேயே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். மேலும் அரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்றிதழும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியதன் காரணமாக, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி கல்லூரிகளும் திறந்து செயல்பட தொடங்கியது. அந்த வகையில் கடலூர் தேவனாம்பட்டினம் கலைக்கல்லூரியும் கடந்த 8-ந் தேதி முதல் செயல்பட தொடங்கியுள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் மாணவர்கள் செல்போனுக்கு, கல்லூரி நிர்வாகம் சார்பில் குறுந்தகவல் அனுப்பப்பட்டது. 

இதில் அரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள், மீண்டும் கட்டணம் செலுத்தி, அரியர் தேர்வு எழுத வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து மாணவ-மாணவிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரியர் தேர்வுக்கான கட்டணத்தை மீண்டும் செலுத்த கூறும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர். 

இதேபோல் அரியர் தேர்வு கட்டணத்தை ரத்து செய்யக்கோரி  விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதல்வர் ராஜவேல்  பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்