மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் யானைகளை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்

மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் யானைகளை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

Update: 2021-02-14 22:59 GMT
மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கொரோனா பரவலுக்கு பிறகு முகாம் நடைபெறுவதால், பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக தோலம்பாளையம் அரசு கிராமிய ஆயுர்வேத மருந்தகம் சார்பில் ஆயுர்வேத மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதற்கு டாக்டர் மேகலை தலைமை தாங்கி பாகன்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கினார். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் செயல் அலுவலர்கள் மற்றும் பாகன்கள் கலந்துகொண்டனர்.

7 டன் பசுந்தீவனங்கள்

முகாமில் 26 யானைகள் புத்துணர்வு பெற்று வருகின்றன. காலை மற்றும் மாலை ஆகிய 2 வேளைகளிலும் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டு உள்ள ஷவர் மேடைகளில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்கின்றன.

 தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்களின் ஆலோசனைப்படி சமச்சீர் உணவு மற்றும் கூந்தல் பனை, சோளத்தட்டு, புற்கள், கரும்பு, தென்னை மட்டை போன்ற பசுந்தீவனங்கள் ஆகியவை வழங்கப்படுகிறது.

 நீலகிரியில் இருந்து கூந்தல் பனை, சத்தியமங்கலம், அந்தியூர், அத்தாணி, கோபி ஆகிய பகுதிகளில் இருந்து புற்கள், சோளத்தட்டு மற்றும் தென்னை மட்டை, மதுரையில் இருந்து கரும்பு என தினமும் 7 டன் வரை பசுந்தீவனங்கள் கொண்டு வரப்பட்டு யானைகளுக்கு உணவாக வழங்கப்படுகிறது. அதனை யானைகள் விரும்பிதின்கின்றன.

சிறுவர்-சிறுமியர் குதூகலம்

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை முதலே முகாமுக்கு பார்வையாளர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வந்து இருந்தனர்.

 அவர்கள் வனபத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, முகாமில் உள்ள யானைகளை பார்வையிட்டு ரசித்து சென்றனர். வரிசையாக வந்து யானைகளை கண்டு ரசிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. யானைகள் செய்யும் குறும்புகளை கண்டு சிறுவர், சிறுமியர் குதூகலம் அடைந்தனர். 

இதற்கிடையில் முகாம் நடைபெறும் இடத்துக்கு அருகில் மாங்காய், வெள்ளரி, கம்பங்க்கூழ், மோர் என பல்வேறு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளில் நேற்று வியாபாரம் களைகட்டியது. 

மேலும் செய்திகள்