கோவையில் காதலர் தின கொண்டாட்டம்

கோவையில் காதலர் தினத்தை இளைஞர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Update: 2021-02-15 00:53 GMT
கோவை,

உலகம் முழுவதும் காதலர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கோவையில் காதலர்கள் ரோஜா பூ கொடுத்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இளைஞர்கள் பூங்காவில் திரண்டனர். 

 காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் காதலர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சியாஷ் (வயது 23), புதுக்கோட்டையை சேர்ந்த சுரேகா(21) என்ற காதல்ஜோடிக்கு தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன் திருமணம் செய்து வைத்தார். 

பின்னர் அவர் கூறுகையில், காதல் திருமணத்திற்கு சில மதவாத அமைப்புகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. காதல் திருமணம் மூலம் மட்டுமே மதம், சாதிகளை ஒழிக்க முடியும். காதல் திருமணம் செய்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

காதல் திருமணம் செய்து கொண்ட சுரேகா கூறும்போது, காதலுக்கும், காதலர்களுக்கும் சாதி, மதம் கிடையாது. எனவே அதை வைத்து காதலர்களை பிரிக்கக்கூடாது. காதலர் தினத்தில் காதலனை கைப்பிடித்ததால் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். 

விழாவில், ஏற்கனவே காதல் திருமணம் செய்த ஜோடிகள் தங்களின் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். கடந்த வாரம் காதல் திருமணம் செய்த மிதுன்-சித்தாரா ஜோடி கேக் ஊட்டி மகிழ்ந்தனர். 

மேலும் செய்திகள்