நம்பியூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த தொழிலாளி- காரணம் என்ன? போலீஸ் விசாரணை மர்ம சாவு

நம்பியூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் சாவுக்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-02-15 22:13 GMT
நம்பியூர்
நம்பியூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் சாவுக்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
பனியன் தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் நிர்மல்குமார் (வயது 50). இவர் கடந்த 6 ஆண்டுகளாக நம்பியூர் சி.எஸ்.ஐ. வீதியில் குடியிருந்துகொண்டு, திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.  திருமணமான இவர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இவர் கடந்த 13-ந் தேதி வீட்டுக்குள் சென்று கதவை உள்புறமாக தாழிட்டுக்கொண்டார். அதன்பின்னர் நேற்று காலை 9 மணி வரை அவர் கதவை திறக்கவே இல்லை. 
துர்நாற்றம்
இந்தநிலையில் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வந்ததால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் உரிமையாளர் குமாரசாமிக்கு தகவல் தொிவித்தார்கள். உடனே அவர் நம்பியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நம்பியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், கிராம நிர்வாக அதிகாரி கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தார்கள். பின்னர் கதவு உடைக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்தபோது, கட்டிலில் நிர்மல்குமார் குப்புற படுத்திருந்த நிலையில் இறந்துகிடந்தார். 
காரணம் என்ன?
இதைத்தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, நிர்மல்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா?, வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்