பூந்தமல்லி பஸ் நிலையத்தில் பஸ் டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய வாலிபர் பஸ்களை இயக்காமல் சக டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

மோட்டார்சைக்கிளுக்கு வழிவிடாததால் ஆத்திரத்தில் மாநகர பஸ் டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய வாலிபரை கண்டித்தும், பஸ்களை இயக்காமல் சக டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-16 05:58 GMT
பூந்தமல்லி, 

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் அரசு பஸ் பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருபவர் பாலசுந்தரம் (வயது 38). இவர், பூந்தமல்லியில் இருந்து தங்கசாலை வரை செல்லும் மாநகர பஸ்சை(தடம் எண் 37)ஓட்டி வருகிறார்.

நேற்று மாலை பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து தங்கசாலை செல்வதற்காக பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.

கத்தியை வைத்து மிரட்டல்

அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 30 வயது வாலிபர் ஒருவர் பஸ் நிலையத்துக்குள் செல்ல வந்தார். ஆனால் எதிரே பஸ்வந்ததால் உள்ளே செல்ல வழிஇல்லை. இதனால் அவருக்கும், பஸ் டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் மாநகர பஸ் டிரைவர் பாலசுந்தரம் கீழே இறங்கினார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டிரைவர் பாலசுந்தரம் கழுத்தில் வைத்து மிரட்டினார். இதனால் டிரைவர் மற்றும் அங்கிருந்த பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர், மோட்டார்சைக்களில் ஏறி அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.

டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

இதை கண்டித்து பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்காமல் சக டிரைவர்கள் அனைவரும் பஸ்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போலீசார், இதுபற்றி விசாரணை நடத்தி டிரைவரை கத்திமுனையில் மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட டிரைவர்கள் மீண்டும் பஸ்களை இயக்கினர்.

மாநகர பஸ் டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்