சென்னை மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேர் பயணம் கொரோனாவுக்கு பிறகு சாதனை

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோநகர் வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட தினம் அன்று ஒரு நாள் மட்டும் சென்னையில் 1.40 லட்சம் பேர் இலவச பயணம் செய்தனர்.

Update: 2021-02-16 06:04 GMT
சென்னை, 

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த ஆண்டு சராசரியாக 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் வீதம் தினசரி பயணம் செய்து வந்தனர். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் செப்டம்பர் மாதம் வரை ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அரசு பிறப்பித்த பல்வேறு தளர்வுகளை தொடர்ந்து செப்டம்பர் 7-ந்தேதி முதல் ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் பயணிகளிடம் சற்று வரவேற்பு குறைந்தது. குறிப்பாக கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும் 13 லட்சத்து 43 ஆயிரத்து 695 பேர் பயணம் செய்தனர்.

1.40 லட்சம் பேர் பயணம்

இந்தநிலையில் வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை புதிய பாதையில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அன்று ஒரு நாள் மட்டும் பகல் 2 மணியில் இருந்து இரவு 11 மணி வரை சென்னை முழுவதும் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கும் இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி 1 லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர். இது தான் கொரோனாவிற்கு பிறகு அதிகபட்சமான பயணிகள் பயணம் செய்ததை ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் உள்ள ரெயில் நிலையங்களில் 13 திருநங்கைளுக்கு மெட்ரோ ரெயில் நிலைய பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் வழங்கப்பட்டு உள்ளன. இவர்கள் 2 சிப்டு முறையில் பணியில் ஈடுபடுவார்கள். திருவொற்றியூர் விம்கோ நகரில் இருந்து விமானநிலையம் செல்ல ரூ.70 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை அதிகமாக இருப்பதால் இதனை குறைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் ரெயில் கட்டணம் குறைப்பு, கும்மிடிப்பூண்டி-அத்திப்பட்டு வரை ரெயில் நீட்டிப்பு போன்றவை அரசு தான் முடிவு செய்து முறையாக அறிவிக்கும்.

மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்