கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி எடியூரப்பாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை; கர்நாடக பா.ஜனதா அதிரடி உத்தரவு

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக பா.ஜனதா எச்சரித்துள்ளது.

Update: 2021-02-16 10:04 GMT
ஒழுங்கு நடவடிக்கை
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மந்திரி பதவி கிடைக்காதவர்கள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. உள்ளிட்ட சிலர் முதல்-மந்திரி எடியூரப்பா, பா.ஜனதா துணை தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக பேசி வருகின்றனர். இதனை காரணம் காட்டி பா.ஜனதா அரசுக்கு எதிராக, காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள்.

இதையடுத்து, கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி முதல்-மந்திரி எடியூரப்பா, விஜயேந்திரா உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக பா.ஜனதா தலைமை எச்சரித்துள்ளது. கட்சியின் தலைவர்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில பா.ஜனதா தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெளிப்படையாக பேசக்கூடாது
கட்சிக்குள், பிற தலைவர்கள் மீது ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதுகுறித்து தலைமையிடம் வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும், எக்காரணத்தை கொண்டு பத்திரிகையில் வெளிப்படையாக பேசக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் பா.ஜனதா கட்சியின் ஒழுங்கை மீறுபவர்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதோ? அதே நடவடிக்கை கர்நாடகத்திலும் எடுக்க தலைமை தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு உடனடியாக நோட்டீசு அனுப்பி வைக்கப்படும் என்றும் பா.ஜனதா தலைமை எச்சரித்திருக்கிறது. முதல்-மந்திரிக்கு எதிராக பேசுவதன் மூலம் மக்களிடையே பா.ஜனதா பற்றி தவறான கருத்துகள் செல்வதால், கட்சி தலைமை இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்