தாளவாடி அருேக கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்

தாளவாடி அருேக கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்

Update: 2021-02-17 22:54 GMT
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தாளவாடி வனச்சரகம். இங்கிருந்து வெளியேறும் சிறுத்தை சூசைபுரம், தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், ஒசூர் பகுதியில் உள்ள கல்குவாரிகளில் பதுங்கியபடி, கடந்த ஒரு ஆண்டாக 25-க்கும் மேற்பட்ட ஆடுகள், 20-க்கும் மேற்பட்ட நாய்களை வேட்டையாடி உள்ளது.  இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சிறுத்தையை பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டு வைத்து உள்ளனர். ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒசூர் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்று சிறுத்தை பதுங்கி கொண்டது. அங்கிருந்தபடியே ஒசூர் கிராமத்துக்குள் புகுந்து கந்தசாமி என்பவரது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை கடித்து கொன்றது. அதைத்தொடர்ந்து அங்கு வனத்துறையினர் கூண்டு வைத்தனர். கூண்டின் உள்ளே மாட்டின் இறைச்சியை கட்டி வைத்தனர். இந்த கூண்டிலும் சிறுத்தை சிக்காமல் தப்பித்து வருகிறது. எனினும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒசூர் கல்குவாரி பகுதியில் சிறுத்தை நடமாடியதை அப்பகுதி பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் சிறுத்தை நடமாடி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். விரைவில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்