ஊராட்சி செயலாளர் தற்கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைது ஒகேனக்கல்லில் பதுங்கி இருந்தபோது பிடிபட்டார்

ஊராட்சி செயலாளர் தற்கொலை வழக்கில் ஒகேனக்கல்லில் பதுங்கி இருந்த ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-02-19 06:30 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கே.வி.ஆர். நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 46). இவரது மனைவி மஞ்சுளா (42). இவர்களுக்கு இந்துமதி, மேகலா என்ற 2 மகள்கள் உள்ளனர். கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த பாஸ்கரன் கடந்த 6-ந்தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள தனது அறையில் உள்ள மின் விசிறியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது. இந்த நிலையில் பாஸ்கரனின் மனைவி மஞ்சுளா தன்னுடைய கணவரின் சாவுக்கு காரணமான ஊராட்சி மன்ற தலைவர் ஹரிபாபு மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

கைது

சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிபாபுவை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் நேற்று ஒகேனக்கல் சென்று ஊராட்சி மன்ற தலைவர் ஹரிபாபுவை கைது செய்து திருவள்ளூர் அழைத்து வந்தனர். பின்னர் அவரை திருவள்ளூரில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்