நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடுவதா? கவர்னர் அனுப்பிய கடிதத்தில் வரலாற்று பிழை; நாராயணசாமி குற்றச்சாட்டு

நியமன எம்.எல்.ஏ.க் களை பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டு கவர்னர் வழங்கிய கடிதத்தில் வரலாற்று பிழை உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

Update: 2021-02-19 23:38 GMT
ஆட்சிக்கு ஆபத்து 
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால்  ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே புதுவை கவர்னர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் நாராயணசாமி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி களின் நிர்வாகிகளுடன் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார் உள்பட இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை   சிறுத்தைகள்,    ம.தி.மு.க. உள்பட 17 கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வரலாற்று பிழை
கூட்டம் முடிந்தவுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி அளித்த கடிதத்தின் அடிப்படையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் தமிழிசை   சவுந்தரராஜன் கடிதம் தந்துள்ளார். அந்த கடிதத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டசபை பதிவேட்டில் நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள்    என குறிப்பிடவில்லை.          நியமன எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. என சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை.
இந்த நிலையிலை் கவர்னர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது. அவர்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதுபற்றி எனக்கு விளக்கம் தர கவர்னருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.
நாளை முடிவு எடுக்கப்படும்.

நியமன எம்.எல்.ஏ.க்கள் பொறுப்பேற்று 6 மாதத்திற்குள் அவர்கள் விரும்பிய கட்சியில் இணைந்து கட்சியின் பெயரை சேர்க்க உரிமை உண்டு. அதன்படி அவர்கள் கட்சியில் சேராவிட்டால், கட்சிசாராத நியமன எம்.எல்.ஏ.க்களாக கருதப்படுவார்கள். 

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மிகப்பெரிய வரலாற்று பிழை செய்துள்ளார். இதுபற்றி சபாநாயகரிடம் பேசுவேன். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது. அதில் எங்கள் நிலைப்பாடு பற்றி முடிவு எடுக்கப்படும்.

எச்சரிக்கை 
புதுச்சேரிக்கு ராகுல்காந்தி வருகையின்போது சோலைநகர் பகுதியில் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஒரு மீனவ பெண் பேசிய போது நிவர் புயலின்போது முதல்-அமைச்சர் வரவில்லை என்று குறிப்பிட்டார். அதற்கு நான் இங்கு வந்தேன் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டேன்.
இந்த விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் ராகுல்காந்தியிடம் பொய் கூறியதாக பரப்புகிறார்கள். இப்படிப்பட்ட வேலையை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர்களும் செய்கிறார்கள்.
என்னிடம் மோத வேண்டுமானால் நேரடியாக மோத வேண்டும். அதற்கு நான் தயார். என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க நினைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்