கியாஸ் சிலிண்டர் வெடித்து உடல் கருகி பெண் சாவு

நாகர்கோவிலில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். வீடும் பலத்த சேதமடைந்தது.

Update: 2021-02-20 15:52 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கியாஸ் சிலிண்டர் வெடித்து பெண் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். வீடும் பலத்த சேதமடைந்தது.
இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மின்கசிவால் தீ விபத்து
நாகர்கோவில் வடிவீஸ்வரம் தளவாய்தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மனைவி ஆறுமுகம் (வயது 70). இவர்களுக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனி குடும்பமாக வெளியூரில் வசித்து வருகின்றனர். இதற்கிடையே சுப்பையா இறந்து விட்டார். இதனால் வீட்டில் ஆறுமுகம் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் அழகம்மன் கோவிலுக்கு சென்று திருவிழா பார்த்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்து தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 2 மணி அளவில் வீட்டில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு உள்ளது. அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்ததால் ஆறுமுகத்தால் மின்கசிவை உடனடியாக உணர முடியவில்லை.
சிலிண்டர் வெடித்தது
இதனையடுத்து வீட்டில் இருந்த பொருட்களில் தீப்பிடித்துள்ளது. சிறிது நேரம் கழித்து கண்விழித்த ஆறுமுகம் அலறியடித்துக் கொண்டு படுக்கையில் இருந்து எழுந்து தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் பொருட்களிலும், துணிகளிலும் ஏற்கனவே தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.
எனவே வீட்டை விட்டு வெளியே வர ஆறுமுகம் முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கரமாக வெடித்தது.
உடல் கருகி சாவு 
இதனால் தீயின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்ட ஆறுமுகத்தால் வெளியே வர முடியவில்லை. அவருடைய அலறல் சத்தம் மட்டுமே கேட்டது. சிறிது நேரத்தில் அவர் அதே இடத்திலேயே உடல் கருகி பிணமானார்.
இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் இதுபற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் நிலைய அதிகாரி துரை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அதன்பிறகு பார்த்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததோடு வீடே உருக்குலைந்து காணப்பட்டது. மேலும் தீ விபத்தில் சிக்கிய ஆறுமுகம் உடல் கருகிய நிலையில் இடிபாடுகளுக்கு இடையே பிணமாக கிடந்தார். இதைத் தொடர்ந்து ஆறுமுகத்தின் உடலை கோட்டார் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
வெடிக்காத சிலிண்டர் 
அதே சமயத்தில் வீட்டில் இருந்த மற்றொரு கியாஸ் சிலிண்டர் வெடிக்காமல் இருந்தது தெரிய வந்தது. எனவே அந்த சிலிண்டரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். அந்த சிலிண்டரும் வெடித்து இருந்தால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளும் பாதிக்கப்பட்டு இருக்கும் என்றும், அதிர்‌‌ஷ்டவசமாக அவ்வாறு ஏற்படவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். 
கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்