மாணவ-மாணவிகள் கல்வி தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தல்

தமிழக அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் கல்வி தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவுறுத்தினார்.

Update: 2021-02-21 15:22 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு 10 ஆயிரத்து 913 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வடிவியல் உபகரண பெட்டிகள், விலையில்லா மிதிவண்டிகள் என 14 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி கல்வித்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்.

சமமான வாய்ப்பு

முதல்-அமைச்சரின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் தான் கொரோனா தொற்று முழுகட்டுபாட்டுக்குள் வந்துள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைய வழியில் கல்வி கற்பதற்கு ஏதுவாக இணையவழி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

அனைத்து மாணவர்களுக்கும் இணைய வழி கல்வியில் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவில் இன்டர்நெட் விலையில்லாமல் பயன்படுத்தும் வகையில் சிம்கார்டு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

நலத்திட்டங்கள்

அதன்படி 7 கலை அறிவியல் கல்லூரி, 6 பொறியியல் கல்லூரி, 6 பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவைகளை சேர்ந்த 10 ஆயிரத்து 913 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா இன்டர்நெட் சிம்கார்டு வழங்கப்படுகிறது. தமிழக அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் கல்வித்தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க. கதிரவன், சீனிவாசா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தமிழரசி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மினி கிளினிக்

இதேபோல தலைஞாயிறு ஒன்றியம் பண்ண தெரு ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) சண்முகசுந்தரம், கொள்ளை நோய் மருத்துவ அலுவலர் லியாகத் அலி, தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் அவை.பாலசுப்ரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் ஜீவிதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளையராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்