தேவூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழையால், அடியோடு சாய்ந்த 5 ஆயிரம் வாழை மரங்கள்

தேவூர் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

Update: 2021-02-22 01:32 GMT
 இதனால் அடியோடு 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. இந்த சேத பாதிப்பு விவரங்களை அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கெடுத்தனர்.

வாழை மரங்கள் சாய்ந்தன
தேவூர் அருகே சென்றாயனூர், பாலிருச்சம்பாளையம், வட்ராம்பாளையம், வெள்ளாள பாளையம், அம்மா  பாளையம் மேட்டுப்பாளையம், சோழக்கவுண்டனூர், தண்ணிதாசனூர், குள்ளம்பட்டி, பொன்னம்பாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி வாழை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக நேந்திரம், கதலி, மொந்தவாழை ஆகிய ரகங்களை சாகுபடி செய்து உள்ளனர். தற்போது வாழைகளில் குலை தள்ளி, காய்கள் காய்க்க தொடங்கிய பருவத்தில் வாழைத்தார்கள் காணப்பட்டன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தும், அடியோடு சாய்ந்தும் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அதிகாரிகள் பார்வையிட்டனர்
இந்த நிலையில் நேற்று சங்ககிரி தோட்டக்கலை உதவி அலுவலர் விஜயவர்மன், தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்ரீதர் பொன்னுசாமி, கருப்பண்ணன், பிரதிப்குமார் மற்றும் உதவியாளர்கள் தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடியோடு சாய்ந்து சேதமான வாழை மரங்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்