மதுரவாயல் பகுதியில் மகனின் மருத்துவ செலவுக்காக வீடுகளில் கொள்ளையடித்தவர் கைது

மதுரவாயல் பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார். மகனின் மருத்துவ செலவுக்காக அவர் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். அவரிடம் இருந்து 56 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-02-22 13:32 GMT
பூந்தமல்லி, 

மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு, மில்லினியம் டவுன் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுவிட்டார். அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்றனர். அதேபோல் அந்த பகுதியில் பல வீடுகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்தது.

இதுகுறித்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கோபால், தலைமை காவலர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடிவந்தனர்.

மருத்துவ செலவுக்காக

இந்த நிலையில் மதுரவாயல் பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றியவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர், வில்லிவாக்கத்தை சேர்ந்த ராஜன் என்ற காமராஜ் (வயது 44) என்பதும், மதுரவாயல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்ததும் தெரிந்தது.

தனது மகனுக்கு உடல் நலக்குறைபாடு இருப்பதால் அதற்கான மருத்துவ செலவுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டதால், இதுபோல் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்ததாகவும் போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

இதையடுத்து ராஜனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள 56 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். கைதான ராஜன் மீது மதுரவாயல், ஆவடி, திருமுல்லைவாயல், நொளம்பூர் ஆகிய பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்