பச்சை தேயிலை மகசூல் அதிகரிப்பு

கூடலூர் பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால், பச்சை தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.

Update: 2021-02-22 13:38 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியில் பருவமழை பெய்யும் காலம் முடிந்து கோடை காலம் நிலவி வருகிறது. மேலும் இரவில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. 

வறட்சியான காலநிலையால் வனப்பகுதியில் புற்கள் கருகி காணப்படுகிறது. இதனால் பல இடங்களில் காட்டுத்தீயும் அடிக்கடி பரவி வருகிறது.  

தொடர்ந்து வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோல் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

மழை

இது மட்டுமின்றி தேயிலைத்தோட்டங்கள் உள்பட விவசாய நிலங்கள் போதிய ஈரப்பதம் இன்றி காய தொடங்கியது. இதனால் பச்சை தேயிலை உள்பட விவசாய பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டது
.

பகலில் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் என இருவேறு காலநிலையால் விவசாயிகள் ஸ்பிரிங்லர் முறையில் தேயிலை தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சும் பணியை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கூடலூர் பகுதியில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று கூடலூர் மற்றும் முதுமலை, மசினகுடி, பொக்காபுரம் உள்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 

மகசூல் அதிகரிப்பு

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டது. மேலும் சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் தேயிலை செடிகளில் பசுமை ஏற்பட்டு புதிய இளம் தளிர்கள் முளைத்து வருகிறது. 

இதனால் பச்சை தேயிலை மகசூலும் அதிகரித்துள்ளது.
மேலும் முதுமலை, கூடலூர் வனப்பகுதியிலும் பரவலாக அடிக்கடி மழை பெய்வதால் வறட்சியால் காய்ந்துபோன புற்கள் முளைத்து வருகிறது. 

இதனால் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இதேபோல் பரவலாக பெய்யும் மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்