அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-22 13:54 GMT
தேனி:

காத்திருப்பு போராட்டம்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்களை 7-வது ஊதியக்குழுவில் சேர்த்து அரசு ஊழியர்களாக மாற்றுவேன் என்று அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. 

அதன்படி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் ஈடுபட்டனர்.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் சாலையோரம் மரங்களுக்கு அடியில் அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் சாந்தியம்மாள் தலைமை தாங்கினார். 

மாவட்ட செயலாளர் நாகலட்சுமி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் முத்தையா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கைவிட மறுப்பு
போராட்டத்தின்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். 

தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், சங்கத்தின் மாநில தலைமை நிர்வாகிகளிடம் இருந்து உத்தரவு வரும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.

மதியம் உணவு வீடுகளில் இருந்தே கொண்டு வந்தனர். அவற்றை ஆங்காங்கே அமர்ந்து சாப்பிட்டனர். 

பின்னர் போராட்டத்தை தொடர்ந்தனர். மாலை வரை அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்