கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை, அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

கடலூர் மாவட்டத்தில் ரூ655½ கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை, அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

Update: 2021-02-22 16:30 GMT
கடலூா்:

கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற ரூ.12 ஆயிரத்து 110 கோடி கடனை தள்ளுபடி செய்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளுக்கு, கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரசீது

சிறப்பு அழைப்பாளராக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 69 ஆயிரத்து 381 ஆண்கள், 19 ஆயிரத்து 512 பெண்கள் உள்பட மொத்தம் 88 ஆயிரத்து 893 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.655 கோடியே 58 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.587.71 கோடி அசல் தொகை, ரூ.61.76 கோடி வட்டி தொகை, ரூ.5.50 கோடி அபராத வட்டி தொகை, ரூ.61 லட்சம் செலவினமாகும். கடன் தள்ளுபடி என்பது எந்த மாநிலத்திலும் இல்லாத ஏற்பாடு. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை மாற்றப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரும் விவசாயி என்பதால் குடிமராமத்து திட்டம், ஆறுகள் இணைப்பு திட்டம் என்று வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்றார்.

பணி நியமன ஆணை

அதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தேர்வு செய்யப்பட்ட 44 உதவியாளர்களுக்கு நேரடி பணி நியமன ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர்கள் ராஜேந்திரன், சண்முகம், ஜெகத்ரட்சகன், துரைசாமி, ஜீவானந்தம் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்