விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்

மாசி மகத்தையொட்டி விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-22 16:52 GMT
விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த உற்சவத்தின்போது, கடலூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் ஒன்று கூடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விருத்தகிரீஸ்வரரை வணங்கி விட்டுச் செல்வார்கள். அதன்படி இந்தாண்டு மாசி மக உற்சவம் வருகிற 26-ந்தேதியும், 27-ந்தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் மாசி மக உற்சவம் மற்றும் தெப்ப உற்சவம் நடைபெறும் மணிமுக்தாற்றில் கழிவுநீர் கலந்து செல்கிறது. இதனால் தர்ப்பணம் கொடுக்க இட வசதியின்றி உள்ளதால் மணிமுக்தாற்றங்கரையை சுத்தம் செய்து தரக்கோரி நகராட்சியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

சாலை மறியல்

இதனாால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நேற்று காலை திடீரென விருத்தாசலம் கடைவீதி நான்குமுனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாசடைந்து காணப்படும் மணிமுக்தாற்றங்கரையை சுத்தம் செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்