இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்

வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.16 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-02-22 17:33 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.16 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். 
கடல் மார்க்கமாக கடத்தல்
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கஞ்சா மற்றும் தங்கம் அடிக்கடி கடத்தி செல்லப்படுகிறது. இதை தடுக்க கியூ பிராஞ்ச் போலீசார் கண்காணிப்பு பணியில்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும் கஞ்சா கடத்தல்  நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் வேதாரண்யம் அருகே பெரியகுத்தகை கடற்கரை ஓரமாக உள்ள கருவேலங்காட்டில் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நாகை கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் கியூ பிராஞ்ச் போலீஸ் சூப்பிரண்டு சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் தலைமையில் ேபாலீசார் பெரியகுத்தகை கடற்கரையில் சோதனை மேற்கொண்டனர். 
ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்
அப்போது கடற்கரையோரமுள்ள கருவேலங்காட்டில் இருந்த  2 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதை தொடர்ந்து அங்கு கிடந்த மூன்று மூட்டைகளை எடுத்து போலீசார் பிரித்து பார்த்தனர். 
அதில்  ஒரு மூட்டைக்கு 15 பார்சல்கள் வீதம் மூன்று மூட்டைகளிலும் 45 பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களை பிரித்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. ஒரு பார்சலில் 2 கிலோ கஞ்சா வீதம் மொத்தம் 90 கிலோ கஞ்சா இருந்தது.  
பின்னர் போலீசார் 90 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்