அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்

அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

Update: 2021-02-22 19:41 GMT
பெரம்பலூர்:

காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
பணிக்கொடை வழங்க வேண்டும்
ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 38 ஆண்டுகளாக குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மட்டுமல்லாமல், பிற அரசு துணை பணிகளையும் செய்து வரும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பல்வேறு தரப்பினர் நேரில் வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்