ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்

மாணவர்கள் சாலை மறியல்

Update: 2021-02-22 21:51 GMT
web photo
துறையூர்
துறையூரை அடுத்துள்ள பெருமாள் பாளையம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் சண்முகம், மாணவர்கள் நெற்றியில் திருநீறு வைக்கக்கூடாது, மாணவிகள் வளையல் அணியக்கூடாது என்று சில நடவடிக்கைகளை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாரதீய ஜனதா கட்சியினர் சார்பில் துறையூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி சண்முகம் ஆகியோர் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், ஆசிரியர் சண்முகம் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில் அந்த பள்ளியை சேர்ந்த ஒரு தரப்பு மாணவர்கள், ஆசிரியர் சண்முகம் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும் அவரை இதே பள்ளியில் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் பள்ளியின் வெளியே வந்து பெருமாள் பாளையத்தில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர், துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி, இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாைல மறியலால் அந்த பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்