சப்-கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-23 15:41 GMT
பொள்ளாச்சி,

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் கடந்த சில நாட்களுக்கு முன்காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆனால் பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். 

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

வேலைவாய்ப்பில் முன்னுரிமை

அரசு மூலம் வழங்கப்படும் ஊக்கத்தொகை போதுமானதாக இல்லை. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000, கடும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1500 ஊக்கத்தொகையாக வழங்கப் பட்டு வருகிறது. இந்த தொகையை வைத்து ஒரு மாதத்திற்கு பால் கூட வாங்க முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம். 

எனவே ரூ.1000 வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமும், ரூ.1500 வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் புதிய சட்ட விதிகளின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கி கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. 

மறியல் போராட்டம் 

மேலும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று கவன ஈர்ப்பு போராட்டமாக குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை. எனவே நாளை  சப்-கலெக்டர் அலுவலகம் முன் காலை 10 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்