விவசாயி கொலை

கல்வராயன்மலை அருகே விவசாயி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2021-02-23 18:20 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள மட்டப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் சடையன் (வயது 85). விவசாயி. இவருக்கு துரூர் எல்லையில் நிலம் உள்ளது.  இந்த நிலத்தை கோவில் கட்டுவதற்காக துரூர் கிராம மக்கள் சடையனிடம் கேட்டுள்ளனர். அதன்படி சடையன் தனது நிலத்தை ஊர் பொதுவில் கிரையம் செய்து கொடுத்துள்ளார். 
அவ்வாறு கிரையம் செய்து கொடுத்த நிலத்தின் அருகில் உள்ள புறம்போக்கு இடத்தை சடையன் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் புறம்போக்கு நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக சடையனும், அவரது மகன் ஆசைதம்பியும் சென்றனர். 

தகராறு

அப்போது துரூர் கிராமத்தை சேர்ந்த சின்னபையன்(65), பழனி (30), மூர்த்தி(27) ஆகிய 3 பேரும் சடையன் அனுபவித்து வந்த புறம்போக்கு நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி கொண்டிருந்தனர்.   இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சடையனும், ஆசைதம்பியும் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் கோவிலுக்காக நாங்கள் எங்கள் சொந்த நிலத்தை தான் கொடுத்தோம். இந்த நிலத்தை கொடுக்கவில்லை. எனவே இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறினர்.
அதற்கு சின்னபையன் உள்ளிட்டவர்கள் கோவிலுக்காக நீங்கள் கொடுத்த நிலத்தை வாங்கும்போது, இதற்கும் சேர்த்து தான் பணம் கொடுத்தோம். தற்போது இதில் கோவில் கட்டப்போகிறோம் என கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

3 பேர் கைது

இதில் ஆத்திரமடைந்த சின்னபையன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து சடையனை கல்லால்  தாக்கினர். அதனை தடுக்க வந்த ஆசைதம்பியையும் அவர்கள் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சடையன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 
இது குறித்த தகவலின் பேரில் கரியாலூர் போலீசார் சடையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
இது குறித்த  புகாரின் பேரில் கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனி, மூர்த்தி, சின்னபையன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக தகராறி்ன்போது சடையன் சின்னபையனை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து சின்னபையன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்