கடலூர் இம்பீரியல் சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள் அவதி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

வழிந்தோடும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2021-02-23 19:57 GMT
கடலூர், 

கடலூர் இம்பீரியல் சாலையில் கூட்டுறவு அச்சகம் அருகே கடந்த 3 நாட்களாக பாதாள சாக்கடை குழாயில் உள்ள மூடி வழியாக கழிவு நீர் வழிந்தோடி வருகிறது. இந்த வழியாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால், பாதாள சாக்கடை மூடி அருகே சாலையில் பெரிய பள்ளமாக மாறி விட்டது. அந்த பள்ளத்தில் கழிவு நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. அதில் வாகனங்கள் செல்லும் போது, அதில் உள்ள கழிவு நீர் நாலாபுறமும் சிதறி அடிக்கிறது. குறிப்பாக அந்த வழியாக இரு சக்கர வாகனங்களிலும், நடந்து செல்வோர் மீதும் படுகிறது. கழிவு நீரில் இருந்து துர்நாற்றமும் வீசி வருவதால் அந்த இடத்தை கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்தபடி கடந்து செல்வதை பார்க்க முடிகிறது. இது பற்றி கடலூர் நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இது வரை கழிவு நீர் வழிந்தோடி வருவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, கழிவு நீரை உறிஞ்சு வெளியேற்றும் இடத்தில் மோட்டார் பழுதாகி விட்டதால், பணியில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தற்போது மோட்டார் சரி செய்யப்பட்டு, பணிகள் நடக்கிறது என்றனர்.

மேலும் செய்திகள்