விருத்தாசலத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2021-02-23 20:26 GMT
கடலூர், 

விருத்தாசலம் அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர்  பரமசிவம். இவருடைய மனைவி வசந்தி. இவர் கடந்த மாதம் 12-ந்தேதி தனது மகனுடன் விருத்தாசலம் கடை வீதியில் உள்ள ஸ்டூடியோவுக்கு சென்று விட்டு மணிமுத்தாறு பாலம் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவர்களை கத்தியை காட்டி மிரட்டினர்.
பின்னர் வசந்தி கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்றனர். இது பற்றி வசந்தி விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில், வடலூர் கருங்குழி காலனி கிழக்கு தெருவை சேர்ந்த கேசவபெருமாள் மகன் மூட்டபூச்சி என்கிற சம்பத்குமார் (வயது 29), அவரது நண்பர் தமிழ்ச்செல்வன் ஆகிய 2 பேரும் சேர்ந்து, வசந்தியிடம் தங்க சங்கிலியை பறித்துச்சென்றது தெரிய வந்தது. 
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதில் மூட்டபூச்சி என்கிற சம்பத்குமார் மீது குறிஞ்சிப்பாடி, முத்தாண்டிக்குப்பம், வடலூர். சென்னை சிட்லபாக்கம் ஆகிய ஆகிய போலீஸ் நிலையங்களில் 10 வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவின்பேரில், சம்பத்குமாரை விருத்தாசலம் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். அதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்