நள்ளிரவில் போராட்ட களத்துக்குள் புகுந்த கருநாக பாம்பால் பரபரப்பு; ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

நள்ளிரவில் போராட்ட களத்துக்குள் புகுந்த கருநாக பாம்பால் பரபரப்பு; ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

Update: 2021-02-23 20:46 GMT
2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்:
நள்ளிரவில் போராட்ட களத்துக்குள் புகுந்த கருநாக பாம்பால் பரபரப்பு
ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
திருச்சி, பிப்.24-
திருச்சியில் 2-வது நாளாக நடந்த அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்திற்குள் நள்ளிரவு கருநாக பாம்பு புகுந்தது. இதனால் ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.
2-வது நாளாக போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியராக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
அதன்படி, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சித்ரா, பொருளாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருநாக பாம்பு புகுந்தது
மாவட்டத்தில் உள்ள 16 வட்டாரங்களை சேர்ந்த 1,850 அங்கன்வாடி மையங்களை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்றனர். பிற்பகலில் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் போராட்ட களத்திற்குள் 5 அடி நீளமுள்ள கருநாக பாம்பு ஒன்று புகுந்தது. அதைக்கண்டதும் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது மோகனசுந்தரி என்ற ஊழியர் தைரியத்துடன், அந்த பாம்பை கம்பால் அடித்து கொன்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்