சங்கரன்கோவிலில் வீடு புகுந்து 26 பவுன் நகை கொள்ளை

சங்கரன்கோவிலில் வீடு புகுந்து 26 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2021-02-23 23:11 GMT
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் வீடு புகுந்து 26 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தாய்-மகள் 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாரதியார் நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் பிச்சையா மனைவி வசந்தா (வயது 60). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 

இதில் ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் சங்கரன்கோவில் கக்கன்நகர் பகுதியிலும் தனியாக வசித்து வருகிறார்கள். பிச்சையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் வீட்டில் வசந்தாவுடன், அவரது மகள் வசித்து வருகிறார். 

26 பவுன் நகைகள்

இந்த நிலையில் வசந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். நேற்று மாலையில் வசந்தா மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பி வந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது 3 பீரோக்கள், வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோக்களில் இருந்த 26 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து உடனடியாக சங்கரன்கோவில் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வீட்டில் ஆட்கள் இல்லாததை ேநாட்டமிட்ட மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

வலைவீச்சு 

மேலும் நெல்லையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து இலவன்குளம் சாலை வரை சென்று படுத்துக் கொண்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். 

சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

மேலும் செய்திகள்